கார்தோம் : உள்நாட்டு போரால் ஸ்தம்பித்து காணப்படும் சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை இந்திய ராணுவத்தின் இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு கப்பல் மூலம் மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது
கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சூடானில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதி படக் அல் பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத் தலைவராக துணை ராணுவத்தின் தளபதி முகமது ஹம்டன் டகலோ உள்ளார்.
நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவதில் இவர்கள் இருவரிடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. துணை ராணுவத்தின் படைப் பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதி படக் அல் பர்ஹன் முயற்சி மேற்கொண்டதாகவும் அதற்கு துணை ராணுவம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து துணை ராணுவத்தின் தளபதி ஜெனரல் முகமது ஹம்டனுடன் அதிவிரைவு ஆதரவு படையினர் இணைந்து போர் நடத்தி வருகின்றனர். ராணுவத்திற்கும் - துணை ராணுவத்திற்கும் இடையே நடக்கும் போரால் நாட்டில் அமைதியின்மை சூழல் நிலவுகிறது. துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் துணை ராணுவத்தினர் குண்டு மழை பொழிந்து வருகின்றனர். இரு ராணுவ பிரிவுகளின் அதிரடி சண்டையால் நாட்டில் அமைதியின்மை சூழல் நிலவுகிறது. மேலும் தலைநகர் கார்தோமில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. ஓட்டுமொத்த நாட்டின் இயங்குதன்மை தடைபட்டு உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பசியால் தவித்து வருகின்றனர்.
ராணுவ தளங்கள் மீது துப்பாக்கிச் சூடு, குண்டுவீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று நிலையில், இந்த மோதல் சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 413 ஆக அதிகரித்துள்ளதாக ஐநா தெரிவித்து உள்ளது. மேலும், படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 551 ஆக அதிகரித்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
மருத்துவமனைகளில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. போதிய மருந்துகள் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ராணுவம், துணை ராணுவத்தை போர் நிறுத்தத்தில் ஈடுபடுமாறு உலக நாடுகள், ஐநா உள்ளிட அமைப்புகள் அறிவுறுத்தி வருகின்றன. அதேநேரம் சூடானில் சிக்கி உள்ள தங்கள் நாட்டினரை மீட்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
ராணுவத்தின் உதவியுடன் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட அமெரிக்கர்களை மீட்கும் முயற்சி நடந்து வருகின்றன. இந்தியாவும் சூடானில் உள்ள சுமார் 4000 இந்தியர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு C-130J விமானங்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் தயார் நிலையில் உள்ளன.
மேலும், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா (INS Sumedha) கப்பலும் சூடான் துறைமுகத்தில் உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : Cheetah : குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழப்பு - என்ன காரணம்?