சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனாவால் உலக நாடுகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. உலகளாவிய பெருந்தொற்று நோயாக மாறியுள்ள அதன் பாதிப்பால் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
கரோனா குறித்து சீன அரசு உலக நாடுகளுக்கு உரிய நேரத்தில் சரியான தகவல்களை அளிக்கவில்லை என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்திருந்தன.
அதேபோல, சீனாவில் உள்ள பல ஜனநாயகவாதிகளும் செஞ்சீன அரசுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விமர்சித்த அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரென் ஷிகியாங் (69) அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
ஹூயுவான் குழுமத்தின் முன்னாள் தலைவரும், கட்சியின் துணைச் செயலாளருமான ரென் கடந்த மார்ச் மாதம் அரசின் பல்வேறு ஒடுக்குமுறைகள் குறித்தும், கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும் விமர்சித்து இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியதை அடுத்து ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்டார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பகிரங்கமாக விமர்சித்த அவர் மீது பின்னர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெறத் தொடங்கின.
இந்நிலையில் இன்று அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக சீன நீதிமன்றம் அறிவித்தது.
அரசின் மீதான விமர்சனங்களை அடக்கி, தணிக்கை கடுமையாக்கி, அதிகாரப்பூர்வமற்ற அமைப்புகளை உருவாக்கி விமர்சகர்களை சீன கம்யூனிஸ்ட் அரசு வேட்டையாடிவருவதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்துவருகின்றன.
நூற்றுக்கணகக்கான ஊடகவியலாளர்கள், தொழிலாளர் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.