கொல்கத்தா: சீனாவில் நடைபெறும் ஆசியப் போட்டியில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகளுக்குச் சீனா விசா வழங்க மறுத்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சீன தூதரகம் பதில் அளித்துள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், வூஷூ எனும் தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சீனா விசா வழங்க மறுப்பு தெரிவித்து இருந்தது.
அருணாச்சல வீரர்களான நைமன் வாங்சு, ஒனிலு தேகா, மேபங் லாம்கு ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனா இந்திய வீரர்கள் சிலருக்கு எதிராகப் பாரபட்சம் காட்டி வருவதாகவும் மேலும், குடியிருப்பு மற்றும் இனத்தின் அடிப்படையில் தனது குடிமக்களை வேறுபடுத்தி நடத்துகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.
இந்நிலையில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 74வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில், சீன தூதர் ஜா லியோ பேசுகையில், “இந்தியா-சீனா இடையேயான உறவு நிலையாக உள்ளது. மக்களின் நலன்கள் அடிப்படையில் மட்டுமே இரு நாடு மத்தியில் வலுவான உறவு ஏற்படும். இரு நாட்டின் முன்னேற்றமே வருங்கால உலகிற்கு வழி வகுக்கும் என தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளின் தகவல் தொடர்புகளை வலுப்படுத்தவும், ஆரோக்கியமான மற்றும் நிலையான பாதையில் பயணிக்கவும், இரு நாட்டின் தலைவர்களின் கருத்துகளைச் செயல்படுத்தி இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்றச் சீனா தயாராக உள்ளது.” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு போட்டிகள்: ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம்!
அருணாச்சல பிரதேசத்தின் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதற்கு , “ஆசிய விளையாட்டுப் போட்டி அனைவருக்கும் பொதுவானது. எல்லாரும் ஒரு குடும்பம். இது இருதரப்பு பிரச்சினை என்பதால் சீன தூதரகத்தைத் தொடர்பு கொள்ள உங்களை அழைக்கிறேன்” எனக் கூறினார்.
அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய விளையாட்டு வீரர்கள் சிலர் மீது சீனா காட்டியுள்ள பாகுபாட்டிற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள இருந்த நிலையில் தனது சீனப் பயணத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் எல்லையை ஒட்டி அருணாச்சல பிரதேசம் இருப்பதால், அதனைச் சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றன. அடிக்கடி அப்பகுதியில் எல்லையைத் தாண்டி தனது நிலைகளை அமைப்பதும், அத்துமீறி நுழைவது போன்ற செயலில் சீன ராணுவம் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சீனா தனது வரைபடத்தில் சேர்த்து வெளியிட்டிருந்தது. இதற்கு, அருணாச்சல பிரதேசத்தின் மக்கள் அனைவரும் சீனா சட்ட விரோதமாக உரிமை கோருகிறது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்தியா சார்பில் சீனாவிற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Asian Games 2023: இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி தங்கம் வென்றது! உலக சாதனை படைத்த இந்திய வீரர்கள்!