பீஜிங் : சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங் நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் வாங்க் யீ சீன வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சீன அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறியப்பட்ட வெளியுறவு அமைச்சர் கின் கேங், கடந்த ஒரு மாத காலமாக தலைமறைவாக காணப்படுகிறார். கடைசியாக ஜூன் 25ஆம் தேதி இலங்கை, ரஷ்யா மற்றும் வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு பீஜிங் சென்ற கின் கேங் ஏறத்தாழ ஒரு மாத காலமாக பொதுவெளியில் தோன்றவில்லை.
அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. கின் கேங் இருப்பிடம் தொடர்பான எந்த தகவல்களையும் சீன வெளியுறவு அமைச்சகமும் வெளிப்படையாக வெளியிடாததால் அவர் தொடர்பான பல்வேறு யூகங்கள் பொது வெளியில் எழத் தொடங்கின. மேற்கு நாடுகளின் ஊடகங்கள் எங்கே கின் கேங்? என தொடர்ந்து கேள்வி எழுப்பின.
கின் கேங் மாயமானதற்கு திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தான் காரணம் என கூறப்பட்டது. பத்திரிகையாளர் பூ சிஸாடியான் என்பவருடன் காதலில் இருந்ததாகவும் அதன் காரணமாக தான் கின் கேங் மாயமாகி இருப்பதாகவும் கூறப்பட்டது. பூ சியாவோடியனுடன், கின் கேங் கொண்டிருந்த காதல் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதனால் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது.
மற்ற மூத்த அமைச்சர்களை காட்டிலும் கின் கேங் அதிபர் ஜி ஜின்பிங் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில், அவரது செயல் கட்சி மூத்த உறுப்பினர்களிடையே முகசுலிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சராக வங்க் யீ நியமிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கின் கேங்கிற்கு பதிலாக சீன வெளியுறவு அமைச்சக பணிகளை வாங்க் யீ மேற்கொள்வார் என சீன ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. அதேநேரம் கின் கேங் பற்றிய எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை சீன வெளியுறவு அமைச்சராக வாங்க் யீ இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Qin Gang : சீன வெளியுறவு அமைச்சர் மாயம்? வெளியான அதிர்ச்சி பின்னணி?