டெல்லி : சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங், திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும் அதனால் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
சீன அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறியப்பட்டவர் வெளியுறவு அமைச்சர் கின் கேங் (57). இவர் கடந்த ஜூன் 25-ம் தேதி இலங்கை, ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு கடந்த மூன்று வாரங்களாக அவர் பொதுவெளிக்கு வரவில்லை.
அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ளவும் இல்லை. கின் கேங் இருப்பிடம் தொடர்பான எந்த தகவல்களையும் இதுவரை சீன வெளியுறவு அமைச்சகமும் வெளிப்படையாக வெளியிடவில்லை. இதனால் கின் கேங் தொடர்பான பல்வேறு யூகங்கள் பொது வெளியில் எழத் தொடங்கின. மேற்கு நாடுகளின் ஊடகங்கள் எங்கே கின் கேங்? என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில், கின் கேங் மாயமானதற்கு திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தான் காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங், பத்திரிகையாளர் பூ சிஸாடியான் என்பவருடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. ஹாங்காங்கை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பினீல்ஸ் செய்தி சேனலில் பிரபல பத்திரிகையாளராக இருந்தவர் பூ சிஸாடியான்.
இவருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் கின் கேங்கும் காதல் இருந்ததாகவும், அதன் பின்னணியில் தான் கின் கேங் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. பு சியாவோடியனுடன், கின் கேங் கொண்டிருந்த காதல் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கு குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதன் காரணமாக அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்ற மூத்த அமைச்சர்களை காட்டிலும் கின் கேங்குக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்ததாக கூறப்படுகிறது. வெளியுறவு அமைச்சரவாதற்கு முன் அமெரிக்காவுக்கான சீன தூதர், துணை வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை கின் கேங் வகித்து வந்தததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : "மணிப்பூர் முதலமைச்சரை பாதுகாக்க பிரதமர் மோடி முயற்சி" - கம்யூ. எம்.பி. குற்றச்சாட்டு!