அபுஜா (நைஜீரியா): தெற்கு நைஜீரியாவில் நேற்று (மே 28) நடைபெற்ற தேவாலய தொண்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
நைஜீரியா நாட்டின் தென்கிழக்கில் உள்ள ரிவர்ஸ் மாகாணத்தில் கிங்ஸ் அசெம்பிளி பெந்தேகோஸ்டல் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏழை எளியோருக்கு இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
அந்த வகையில், நேற்று இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி காலை 9 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில், காலை 5 மணிக்கே ஏராளமானோர் வரத் தொடங்கியுள்ளனர். சிறிய வாசல் வழியே அனைவரும் முண்டியடித்து கொண்டு செல்ல முயன்றுள்ளனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதில் குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் சிக்கி கொண்டனர். கர்ப்பிணி ஒருவர், குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏழு பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தையடுத்து, இலவச பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. நைஜீரியாவில் கடந்த காலங்களில் இதேபோன்று சம்பவம் நடைபெற்றுள்ளது. 2013ஆம் ஆண்டு தெற்கு நைஜீரியா அனம்ப்ராவில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். 2013ஆம் ஆண்டு தலைநகர் அபுஜாவில் நடத்தப்பட்ட அரசு வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி