லண்டன்: சுமார் 70 ஆண்டுகளாக இங்கிலாந்து நாட்டின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபேத், உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக, ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் செப்.8ஆம் தேதி காலமானார். அவரது மறைவு இங்கிலாந்து மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராணி எலிசபெத்துக்குப் பிறகு அரச பதவியை 73 வயதான அவரின் மூத்த மகன் 3ஆம் சார்லஸ் இன்று (செப் 10) ஏற்கிறார்.
பிரிட்டன் மன்னராக அறிவிக்கப்பட்ட பின் 3ஆம் சார்லஸ், முதல் முறையாக நேற்று (செப் 9) பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்றார். அப்போது எராளமான பொதுமக்கள் அவரது வாகனத்தை சூழ்ந்தனர். அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக வாகனத்தில் இருந்து இறங்கிய சார்லஸ் மக்களுடன் கைகுளுக்கி, உரையாடினார். பின்னர், அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணிக்கு மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மலர் அஞ்சலிகளின் பெரிய குவியல்களைப் பார்வையிட்டார்.
இதையடுத்து மக்களிடம் பேசிய மூன்றாம் சார்லஸ், “ராணி எலிசபெத்தை இழந்து தவிக்கும் மக்களின் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத், மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர். அன்பு, விஸ்வாசம், மரியாதையோடு என் வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவேன். பிரிட்டன் இளவரசராக வில்லியம் செயல்படுவார்” என்று தெரிவித்தார்.
மூன்றாம் சார்லஸ் இன்று (செப் 10) லண்டனிலுள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில், அக்சஷென் கவுன்சில் எனப்படும் சடங்கு அமைப்புக்கு முன்னால் அதிகாரபூர்வ மன்னராக பதவியேற்க உள்ளார். இந்த அக்சஷென் கவுன்சிலில், அந்நாட்டின் மூத்த அமைச்சர்கள், காமன்வெல்த் உயர் ஆணையர்கள், லண்டன் லார்டு மேயர் உள்ளிட்டோர் பங்குபெறுவர்.
இதையும் படிங்க: இரண்டாம் எலிசபெத்தின் இந்தியப் பயணங்கள்... நினைவுத்தொகுப்பு...