கொழும்பு: அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அங்கு கடந்த இரு மாதமாக மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் உள்பட பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கைக்கு ராஜபக்ச குடும்பம் செவி சாய்க்கவில்லை. இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை (மே6) அதிபர் மாளிகையில் இரகசிய கூட்டம் ஒன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அதிமுக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மகிந்த ராஜபக்ச ராஜினாமா: அப்போது தாம் ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்ச ஒப்புக்கொண்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. அந்தச் செய்தியில் வரும் திங்கள்கிழமை (அதாவது இன்று) மகிந்த ராஜபக்ச பதவி விலகுவார் என்று கூறப்பட்டிருந்தது.
அதேபோல் இன்று (மே9) மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இது அந்நாட்டில் கூச்சல் குழப்பத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து தலைநகரில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுங்கட்சி எம்.பி., சுட்டுக்கொலை: அப்போது ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 23 பேர் காயமுற்றனர். இதற்கிடையில், நிட்டம்புவ பிரதேசத்தில் ஆளுங்கட்சி எம்பி அமரகீர்த்தி அதுகோரல்லா (Amarakeerthi Athukorala) துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுங்கட்சி எம்பியான அமரகீர்த்தி அதுல்கோரல்லா நிட்டம்புவ பிரதேசத்தில் காரில் சென்றபோது சிலர் காரை மறித்துள்ளனர். இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தொடர்ந்து கட்டடம் ஒன்றில் தஞ்சமடைந்த எம்பி அமரகீர்த்தி அதுல்கோரல்லா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் மூவர் வரை காயமுற்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
ரயில் போக்குவரத்து தடை: இலங்கையில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருவதால் அங்கு ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மின்சார இணைப்பு இல்லை. தகவல் தொழில்நுட்ப சேவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுக்க 144 தடை உத்தரவும், போராட்டம் நடைபெறும் இடங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் நாடு முழுக்க வன்முறைகளும் வெடித்துள்ளன. நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் சில காணொலிகளும் வெளியாகியுள்ளன.
அதிபர் கோத்தபய வேண்டுகோள்: இதற்கிடையில் நாட்டு மக்களிடம் வன்முறை தீர்வாகாது, மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என அதிபர் கோத்தபய ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அனைத்து போலீசாரும் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆளுங்கட்சிக்கு எதிராக போராடும் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதலுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அரசுக்கு எதிராக மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்திவருகின்றனர்.
அரசியல் பயங்கரவாதம்: ஆனால் ஆளுங்கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், “இந்த அரசியல் பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்க்கிறோம்” எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, “சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : பதவி விலகினார் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச!