வாஷிங்டன்: தன் முன்னாள் மனைவியான நடிகை ஏஞ்சலினா ஜோலி தாங்கள் கடந்த காலங்களில் இணைந்து நடத்திய ’மிராவல் ஒயின்’ நிறுவனத்தின் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக நடிகர் பிராட் பிட் குற்றஞ்சாட்டியுள்ளார். ஏஞ்சலினாவை எதிர்த்து வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார் பிராட் பிட். அதில், ’மிராவல் ஒயின்’ நிறுவனத்தின் பங்கை வேறொருவருக்கு ஏஞ்சலினா விற்றதாகவும், ஒப்பந்தப்படி அது தவறு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தன்னை புண்படுத்த தன் முன்னாள் மனைவி ஏஞ்சலினா முயல்வதாகவும், மிராவல் ஒயின்ஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு ஏஞ்சலினாவின் பங்கு எதுவுமே இல்லை என்றும் பிராட் பிட் தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கெனவே ஏஞ்சலினா தனது பங்கை மிராவல் நிறுவனத்தை எப்போதும் ஆட்கொள்ள நினைக்கும் ஃபிரெஞ்சு நிறுவனமான ’Tenute del mondo'-விடம் விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிராட் பிட்டின் வழக்கறிஞர்கள் குழு குற்றஞ்சாட்டியுள்ளனர்.
’Stoli group' எனும் ஓட்கா தயாரிக்கும் நிறுவனம் மிராவலின் சில ரகசிய தகவல்களைத் தெரிந்துகொண்டு தொழில் போட்டியில் முந்த நினைப்பதாகவும் பிராட் பிட் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் பிராட் பிட்டின் மிராவல் ஒயின் நிறுவனத்தின் இத்தனை நாள் புகழுக்கு களங்கம் நிகழ வாய்ப்புள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.