லண்டன்: இலக்கிய உலகில் முக்கிய அங்கீகாரமாக "புக்கர் பரிசு" கருதப்படுகிறது. ஆண்டுதோறும் சிறந்த நாவலுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 2022ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு, இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகாவுக்கு வழங்கப்பட்டது. இலங்கை உள்நாட்டு போர் தொடர்பாக அவர் எழுதிய "தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மெய்டா (The Seven Moons of Maali Almeida)" என்ற நாவலுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டது.
புக்கர் பரிசுத் தேர்வில் இறுதிப்போட்டியில் இடம்பெற்ற 6 நாவல்களில், கருணாதிலகாவின் நாவலை நடுவர்கள் தேர்வு செய்தனர். இதையடுத்து பிரிட்டனில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி நடந்த விழாவில், ஷெஹான் கருணாதிலகா புக்கர் பரிசை பெற்று கொண்டார். பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் மனைவி கமிலா, அவருக்கு புக்கர் பரிசை வழங்கினார். 58,000 டாலர் பணம் பரிசாக வழங்கப்பட்டது.
ஷெஹான், 'தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மெய்டா' நாவலை இலங்கை உள்நாட்டு போரை அடிப்படையாக கொண்டு எழுதினார். புகைப்பட கலைஞரான மாலி அல்மெடா என்பவர், இறந்த பிறகு தன்னை கொன்றவர்களை கண்டுபிடிக்க மீண்டும் உயிர் பிழைப்பதும், உள்நாட்டு போரின் கொடூரம் தொடர்பாக மறைக்கப்பட்ட விஷயங்களை புகைப்படங்கள் மூலம் வெளியே கொண்டு வரும் வகையிலும் இந்த நாவலை எழுதியுள்ளார். உள்நாட்டு போரில் இறந்தவர்கள் சிக்கலான நிகழ்காலத்துடன் பேசக்கூடும் என அவர் நம்பினார்.
இதுதொடர்பாக கருணாதிலகா கூறுகையில் "உள்நாட்டுப் போர் முடிந்தவுடன், எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர்? இவை யாருடைய தவறு? என்பது குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன. இந்த விவாதத்தால் எங்களுக்கு எதுவும் புலப்படவில்லை. அந்த விவாதங்களில் போதிய உண்மையோ, நல்லிணக்கமோ இருப்பதாக நான் உணரவில்லை.
அதனால், நான் ஒன்றை யோசித்தேன். இறந்துபோனவர்களின் அமைதியான குரல்களை பேச அனுமதித்தால் என்ன? அவர்கள் பேசுவது போல ஒரு பேய் கதையை எழுதினால் என்ன? என்று நினைத்தேன். அதேநேரம் நாவல்கள் எழுதுவது ஒரு ஆபத்தான வேலை என்று தோன்றியது. நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி கத்தியால் குத்தப்பட்டதில் அது தெரிகிறதல்லவா?
நான் என்னை ஒரு அரசியல் எழுத்தாளராகவோ அல்லது சர்ச்சைகளை பேசும் நபராகவோ பார்க்கவில்லை. அதேநேரம் உள்நாட்டு போர் பற்றி எழுதுவதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன். இந்த முயற்சி பாதுகாப்பற்றதாக இருந்திருக்கலாம், அது தவறான சிறகுகளை உடைத்திருக்கலாம். 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததைப் பற்றிய புனைவு என்பதால், எனக்கு இதுகுறித்து எழுத சுதந்திரம் கிடைத்தது என நினைக்கிறேன்.
எனது அடுத்த படைப்பை 2000களின் முற்பகுதி தொடர்பாக எழுத இருக்கிறேன். அதேபோல் இந்த ஆண்டு இலங்கையில் நடந்த பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் குறித்து குறிப்பு எடுத்து வருகிறேன்.
எனது படைப்புகளில் முக்கிய விஷயமாக நான் கருதுவது நகைச்சுவை உணர்வும், கேலியும். நாம் ஒருவரை நோக்கி கேலியாக சிரிக்கும்போது, அவர் பலவீனமாக உணர்வார். அப்படிப் பார்க்கும்போது கடந்த சில தசாப்தங்களுக்கு முன்பு எங்களால் அப்போதைய அரசாங்கத்தைப் பார்த்து கேலியாக சிரிக்க முடியவில்லை. ஆனால் இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இடைப்பட்ட காலத்தில் பத்திரிகைகளுக்கு சிறிது சுதந்திரம் கிடைத்துள்ளது. மக்கள் அரசாங்கத்தை கேலி செய்யும் அளவுக்கு தைரியமானவர்களாக மாறிவிட்டார்கள். அனைத்திற்கும் மேலாக தற்போது வீதியில் இறங்கி அதிகாரத்தில் உள்ளவர்களை விரட்டும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டது. இது ஒரு திருப்பு முனை. இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீதியில் இறங்கியது ஒரு அற்புதமான தருணம்.
தங்களைப் பற்றி மட்டும் கவனம் செலுத்திய சாமானியர்கள் அனைத்தையும் கடந்து ஒன்று கூடினர். அனைவருக்கும் ஒரு பொதுவாக குறிக்கோள் இருந்தது. அதனால் சில தசாப்தங்களுக்கு முன்பு இருந்ததுபோன்ற ஒரு அமைதி நிலைக்கு நாம் செல்ல வேண்டாம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல்