ஐக்கிய அரபு எமீரேட்ஸ் : ஈரான் போலீஸ் காவலில் இருந்த 22 வயது பெண் இறந்ததால் கடந்த சில நாட்களாக, அந்நாட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (செப்-22) ஈரானிய பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 9 பேர் உயிரிழந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஈரானில் அமல்படுத்தப்பட்ட ஆடை குறியீட்டை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, போலீஸாரால் கைது செய்யப்பட்ட இளம் பெண் மஹ்சா அமினி போலீஸார் காவலில் இருந்தபோது மரணமடைந்தார்.
இதனையடுத்து அவரது மரணத்திற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது. இருப்பினும் அப்பெண் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், தவறாக நடத்தப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவரது குடும்பத்தினர் மஹ்சா அமினியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறினர்.
மேலும் இளம்பெண்ணின் மரணத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து பலர் கடந்த நான்கு நாட்களில் அரசாங்கத்திற்கு எதிராகப் பலர் போராடி வருகின்றனர்.தெஹ்ரானில் உள்ள பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் கெர்மன்ஷா போன்ற தொலைதூர மேற்கு நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
ஈரானின் ஊடகம் தலைநகர் தெஹ்ரான் உட்பட குறைந்தது 13 நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாக அறிவித்தது. எதிர்ப்பாளர்கள் சமூக அடக்குமுறைக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வடமேற்கில் உள்ள இறந்த அமினியின் சொந்த மாகாணமான குர்திஸ்தானில், நான்கு எதிர்ப்பாளர்கள் நேரடித் தீயில் எரிந்து இறந்ததாக மாகாண காவல்துறைத்தலைவர் கூறினார்.
இதுவரை போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் காவல்துறை துப்பாக்கிகள் ஏந்தி தாக்குதல் நடத்தவில்லை என விளக்கமளித்துள்ளது. மேலும் கூட்டங்களை கலைப்பதற்காக கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன எனவும் கூறியுள்ளது. அந்நிய நாடுகளின் தூண்டுதலால்தான் போராட்டம் நடந்ததாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வன்முறையில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:ஹிஜாப் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம் உத்தரவு!