விழுப்புரம்: விழுப்புரம் வெள்ள பாதிப்புகள் குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வில் இருந்தபோது நான் உள்பட அலுவலர்கள் மீது சேறு அடிக்கப்பட்டது, சாலை மறியல் போராட்டம் நடந்தது. இது எல்லாம் அரசியலுக்காக; அதை நான் அரசியலாக்க விரும்பவில்லை,” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது. ஆனால் முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஓரளவு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்தில் பாதித்த பகுதிகளை உடனடியாக ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் மொத்தமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். விக்கிரவாண்டியில் 6 பேர், திருவெண்ணெய்நல்லூரில் 2 பேர், விழுப்புரத்தில் 5 பேர், வானூரில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மழையினால் நெடுஞ்சாலை துறை கட்டுபாட்டில் உள்ள 26 சாலைகள் சேதமடைந்துள்ளன. அதில் 17 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. விளைநிலங்கள் 80 ஆயிரத்து 520 ஹெக்டர் பாதிக்கப்பட்டுள்ளன. ஹெக்டேருக்கு 22,500 ரூபாய் மானவாரி பயிருக்கு 8500 ரூபாய் வழங்கப்படும்.
கன மழையால் 94 பசுமாடுகள் மற்றும் கன்றுகள், 352 ஆடுகள் உயிரிழந்துள்ளன. 67 நிவாரண முகாம்கள் அமைத்து 4906 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கபட்டவர்களுக்கு 69,000 உணவு பொட்டலங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. கூரை வீடுகள் சேதமடைந்ததற்கு 10 ஆயிரமும், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு கலைஞர் கனவு இல்லத்தில் வீடுகட்டி தரப்படும்.
இதையும் படிங்க: ஐந்து மாதம் கூட தாங்கல! மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் - பொதுப்பணித்துறை விளக்கம்!
சான்றிதழ்கள், ஆதார் அட்டை மழை நீரால் தொலைத்தவர்களுக்கு தனி சிறப்பு முகாம் அமைத்து வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.
மேலும் சாத்தனூர் அணையில் இருந்து முறையாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது என நீர் வளத்துறை அமைச்சரே கூறியுள்ளார். அதிக நீர் வந்ததாலே திறந்து விடப்பட்டது. முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால், மட்டுமே அதிக உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் சேதங்கள் முறையாக கணக்கெடுக்கப்பட்டு, அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க முதலமைச்சர் முறையான நிவாரணம் அறிவித்துள்ளார்.
நிவாரணம் இரண்டாயிரம் கொடுக்க வேண்டியதை, ஆராயிரம் கொடுங்கள் என அண்ணாமலை தெரிவிக்கிறார். அதனை ஒன்றிய அரசிடம் அவரே கேட்டு கொடுக்க சொன்னால் நன்றாக இருக்கும். ஓரிரு நாட்களில் விழுப்புரம் மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பும்” என கூறினார்.