கலிபோர்னியா: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் சீன புத்தாண்டை முன்னிட்டு பொது மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், மான்டேரி பார்க்கில் உள்ள கேளிக்கை விடுதியில் கொண்டாட்டத்தின்போது உள்ளே நுழைந்த நபர், கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து விடுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தெரியவராத நிலையில், குண்டடி காயம் பட்டவர்கள் அளித்த தகவல்களின் படி துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் 60 வயதுக்கும் மேற்பட்டவர் என்பதை அறிந்தனர். அதேநேரம் தனியாக நின்ற வேனில் 72 வயது மதிக்கத் தக்க முதியவரின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். சடலமாக மீட்கப்பட்டவர் ஹூ கேன் டிரன் என்றும் 2ஆவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போது மக்கள் தப்பிய நிலையில் தன்னைத் தானே ஹூ கேன் டிரன் சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாக கலிபோர்னியா போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கி பயன்படுத்த அனுமதிக்கப்படுவதால் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. நியூ யார்க், கலிபோர்னியா உள்ளிட்ட மக்கள் அதிகம் மாகாணங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
திருட்டு மற்றும் சமூக விரோத கும்பல்கள் கேளிக்கை விடுதி, பார் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்தி திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற மோண்டரெரி பூங்கா பகுதி ஆசிய மற்ரும் அமெரிக்க மக்கள் அதிகம் அளவில் வசிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து அந்த மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாகாண அரசு எடுத்தது. 21 வயதுக்குட்பட்டவர்கள் துப்பாக்கி பயன்படுத்த பல்வேறு தடைகள் அறிவிக்கப்பட்டன.
துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட உத்தரவிட்டுள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் மற்ற மாகாணங்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நேதாஜி பிறந்த நாளில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மரியாதை