ரோம்: இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் சுமார் 11,000 அடி உயரமுள்ள மர்மோலாடா சிகரத்தை நோக்கி 15 பேர் மலையேறுபவர் நேற்று (ஜூலை 3) புறப்பட்டனர். இதனிடையே திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் 15 பேரும் பனியில் மாயமாகினர். இதுகுறித்து ஆல்பைன் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், மீட்புக்குழு மோப்ப நாய்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள ஒருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியில் சில மாதங்களாகவே வெப்பம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக பதிவாகிவருகிறது. இதனால் பனிச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று மீட்புப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்ப்ஸ் மலைத்தொடர் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, மொனாக்கோ, இத்தாலி, லிச்சென்ஸ்டீன், ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா ஆகிய எட்டு நாடுகளில் பரந்து விரிந்திருக்கிறது. ஐரோப்பாவில் அமைந்துள்ள மிக உயர்ந்த, நீண்ட மலைத்தொடராகும். இந்த மலைத்தொடர்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் மலையேற வருவது வழக்கம்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 19 பேர் உயிரிழப்பு