போர்ட்லேண்ட்: வர்த்தக ரீதியாக அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அமெரிக்காவில் நடுவானில் அலாஸ்கா ஏர்லைன்ஸின் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அதன் கதவில் ஏற்பட்ட திடீர் ஓட்டையால், கதவு காற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஒரேகான், போர்லேண்டில் இருந்து கலிபோர்னியாவிலுள்ள ஒண்டாரியாவுக்கு நேற்று (ஜன.5) மாலை 5.07 மணியளவில், அலாஸ்கா ஏர்லைன்ஸின் போயிங் 737-9 என்ற சிறிய ரக விமானம் புறப்பட்டது. முன்னதாக விமானத்தின் அனைத்து சோதனைகளையும் முடித்த பின்னர், 174 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் இந்த விமானம் புறப்பட்டது. இந்நிலையில், வானில் 16 ஆயிரம் அடியில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் கதவில் சிறிய அளவிலான ஓட்டை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, காற்றின் வேகம் காரணமாக மையத்தில் அமைந்திருந்த விமானத்தின் கதவு நடுவானில் பறந்துள்ளது. இதனால் பதட்டமடைந்த பயணிகள் அலறியுள்ளனர். பயணிகளின் அலறலைக் கண்டு பணியாளர்கள் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, இந்த விமானம் மாலை 5.27 மணியளவில் போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் X தளத்தில் பதிவிட்டதாவது, "நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை" எனத் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகமும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளும்” என அறிவித்துள்ளது.
இது குறித்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், "போர்ட்லேண்டில் இருந்து 174 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் கலிபோர்னியாவுக்கு புறப்பட்ட போயிங் 737-9 சிறிய ரக விமானத்தில் ஏற்பட்ட ஓட்டையினால் அவசர அவசரமாக போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. மேலும், விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயனிகளுக்கு அலாஸ்கா அதன் மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழு விசாரணை முடியும் வரை அலாஸ்காவின் போயிங் ரக விமானம், அதன் சேவைகளை நிறுத்துகிறது. தொடர் சோதனைக்குப் பின்னர் முழு விவரங்கள் தெரிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஜப்பான் நிலநடுக்கம்; உயிரிழப்பு எண்ணிக்கை 100ஆக உயர்வு!