ஜேக்சன்வில்லி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜேக்சன்வில்லி பகுதியில் உள்ள டாலர் ஜெனரல் ஸ்டோரில், ஆகஸ்ட் 26ஆம் தேதி, 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கறுப்பு இன மக்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். 3 கருப்பின மக்கள் கொல்லப்பட்ட சம்பவம், அங்கு நிறவெறித் தாக்குதல் மீண்டும் தலைதூக்கி உள்ளதா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த அப்பகுதியின் காவல் துறை தலைவர் டி.கே வாட்டர்ஸ் கூறியதாவது, "இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், முற்றிலுமாக, இனவெறி தாக்குதலே ஆகும். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், கறுப்பின மக்கள் மீது அதீத வெறுப்பு கொண்டு இருந்தார். கறுப்பின மக்களை சுட்டுக் கொன்ற நபர், இறுதியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், எந்தவொரு பெரிய இயக்கத்தையும் சேர்ந்தவர் இல்லை. 20 வயதான அந்த இளைஞனிடம் கிளாக் கைத்துப்பாக்கி மற்றும் ஏஆர் செமி ஆட்டோமெட்டிக் துப்பாக்கி இருந்தது. ஜேக்சன்வில்லி பகுதியில் வீடியோ கேம் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில், 2 பேரை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது.
எட்வர்ட்ஸ் வாட்டர் பல்கலைக்கழகத்தின் அருகே உள்ள டாலர் ஜெனரல் ஸ்டோர் பகுதியில், மதியம் 2 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று உள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், அருகில் உள்ள கிளே கவுண்டி பகுதியில் இருந்து காரில் வந்து உள்ளார். துப்பாக்கிச் சூட்டை அரங்கேற்றுவதற்கு முன்பு, தனது தந்தைக்கு, ஒரு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதை, அவர் பார்ப்பதற்குள், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேற்றப்பட்டு உள்ளதாக" என்று ஷெரீப் வாட்டர்ஸ் தெரிவித்து உள்ளார்.
எட்வர்ட்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் யாரும் இதில் சம்பந்தப்படவில்லை, அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக, பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கறுப்பின மக்களை குறி வைத்து வெள்ளை இன மக்கள் தாக்குதல் நடத்தி வரும் நிகழ்வு, அங்கு தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
2015ஆம் ஆண்டில், தெற்கு கரோலினா மாகாணத்தின் சார்லஸ்டன் பகுதியில் உள்ள ஆப்பிரிக்க இனத்தவரின் எபிஸ்கோபல் தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 2022ஆம் ஆண்டில் நியூயார்க் மாகாணத்தின் பரபரப்பு மிகுந்த பப்பல்லோ சூப்பர் மார்க்கெட்டில், கறுப்பின மக்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலில், 10 பேர் உயிரிழந்து இருந்தனர்.
இவ்வாறாக, அமெரிக்காவில், கறுப்பின மக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது. கருப்பின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் நிறவெறித் தாக்குதலுக்கு தீர்வு காணும் பொருட்டு, தலைநகர் வாஷிங்டனில் பிரம்மாண்ட அமைதிப் பேரணி நடைபெற்ற அதே நாளில், புளோரிடா மாகாணத்தில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.