வெலிங்டன் : நியூசிலாந்து கெர்மாடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 7 புள்ளி 1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. இந்திய நேரப்படி காலை 6:11 மணி அளவில் நியூசிலாந்தில் உள்ள கெர்மாடெக் தீவுகளில் நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அதேநேரம் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு முன்னேறிச் செல்லுமாறு நியூசிலாந்து தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த நில நடுக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தொடர் கண்காணிப்பில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பசிபிக் கடற்பரப்பில் இருந்து 900 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கெர்மாடெக் தீவில் ஏற்பட்ட நில அதிர்வால், ஹவாய் தீவு பகுதிகளில் லேசான அதிர்வு தென்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் ஹவாய் தீவு பகுதிகளில் எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இதற்கு முன் கடந்த மார்ச் மாதமும் இதேபோன்று நியூசிலாந்து கெர்மாடெக் தீவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை அந்த தீவை நில நடுக்கம் புரட்டியது. காலை 6.40 மணி, அதைத் தொடர்ந்து 6.55 மணி என அடுத்தடுத்து இரண்டு முறை நில நடுக்கம் ஏற்பட்டது.
முதல் நடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரைக்கு ராட்சத அலைகள் எழும்பின். இருப்பினும் அப்போதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க : பாலியல் புகார் : மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் - விசாரணையில் வெளிப்படைத்தன்மை?