பாகிஸ்தான்: பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இன்று (ஆகஸ்ட் 16) பயணிகள் சென்ற பேருந்து, எண்ணெய் டேங்கர் லாரி மீது மோதிக் கொண்ட விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
கடந்த மூன்று நாட்களில் பஞ்சாப்பில் நடந்த இரண்டாவது பெரிய சாலை விபத்து இது என்று மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்தனர். லாகூரில் இருந்து சுமார் 350 கிமீ தொலைவில் உள்ள முல்தானில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் லாகூரில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து எதிரே வந்த எண்ணெய் டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்து மற்றும் டேங்கர் இரண்டும் தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் உயிருடன் எரிந்தனர்.
இது குறித்து தகவல் அளித்த 1122 மீட்புக் குழுவின் செய்தியாளர், ‘ விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆறு பேர் மீட்கப்பட்டு முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்தார். மேலும் "இறந்த பயணிகளின் பெரும்பாலான உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு முற்றிலும் எரிந்துள்ளன. இந்த உடல்கள் டிஎன்ஏ சோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்" என்று அவர் கூறினார்.
பஞ்சாப் முதலமைச்சர் பர்வேஸ் இலாஹி விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க சுகாதார அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:காஷ்மீரில் வீரர்கள் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது