அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப்பின் 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை படையெடுத்த அமெரிக்கா, அங்கு நடைபெற்ற தலிபான் ஆட்சியை அகற்றி புதிய அரசை நிறுவியது.
இதையடுத்து, அமெரிக்க அரசுக்கும், தலிபான் பயங்கரவாத படையினருக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாகக் கடும் மோதல் நிலவிவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவரவும், தேவையற்ற பொருட்சேதத்தையும், உயிர்சேதத்தையும் குறைக்க அமெரிக்கப் படையினரை நாடு திரும்பச் செய்யும் நோக்கில், தலிபான்களுடன் அமெரிக்கா கடந்த 2018ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையில் இறங்கியது.
இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு இருதரப்பினரும் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம் கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று கையெழுத்தாகவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் கலந்துகொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கத்தாருக்கான இந்தியத் தூதர் பி.குமரன், இதில் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.
தலிபான் தொடர்பான கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதி கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க : முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க - தலிபான் ஒப்பந்தம், இந்தியாவுக்கு அழைப்பு