வளைகுடா அருகேயுள்ள சர்வதேச கடல் பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி தங்கள் நாட்டு கடற்படையின் கப்பல்கள் சென்றுகொண்டிருந்தபோது ஈரான் பாதுகாப்புப் படையின் 11 கப்பல்கள் ஆபத்தான, பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்க கடற்படை குற்றஞ்சாட்டியிருந்தது.
இதையடுத்து, ஈரானின் தென் கடல் பகுதியில் அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈரான் கப்பல்கள் ஈடுபட்டால் அக்கப்பல்கள் மீது குண்டு வீச தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள ஈரான் ராணுவப் படையின் தலைமைத் தளபதி ஹொசைன் சலாமி, அமெரிக்காவின் முறையற்ற ஆபத்தான நடவடிக்கைகள் காரணமாகவே அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதாக விளக்கமளித்தார்.
மேலும் இது தொடர்பாக ஈரான் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரானின் தெற்குப் பகுதியுள்ள ஓமன் கடல் பகுதியிலும் வளைகுடா கடல் பகுதியிலும் செல்லும்போது சர்வதேச கடல்சார் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
அந்தப் பகுதியில் செல்லும் கப்பல்கள் பதற்றத்தை ஏற்படுத்தும் ஆபத்தான செயல்களில் ஈடுபடக் கூடாது. அப்படி ஏதேனும் ஆபத்தான செயல்களில் அமெரிக்க கப்பல்கள் ஈடுபட்டால் அதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கரோனாவால் 60,000 அமெரிக்கர்களே உயிரிழப்பர், அதனால் எனக்கே வாக்களியுங்கள்!' - ட்ரம்ப்