ஜெருசலேம்: இஸ்ரேலில் பையோ என்டெக், ஃபைசர் நிறுவனம் இணைந்து கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்தும் பணி கடந்த டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தற்போதுவரை 8 லட்சம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
முதல்கட்டமாக அந்நாட்டில், மருத்துவ முன்கள பணியாளர்கள், மருத்துவ பள்ளி மாணவர்கள், முதியவர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நெதன்யாகுவும் கரோனா தடுப்பு மருந்து போட்டுக்கொண்டார்.
நேற்று மட்டும் அந்நாட்டில் ஒன்றரை லட்சம் பேருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதை அடுத்து அந்நாட்டில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போதுவரை அந்நாட்டில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 312 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் 2 கோடியைத் தாண்டிய கரோனா; 3.50 லட்சத்தை தாண்டிய உயிரிழப்பு!