12 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முதன்முறையாக நேற்று சவுதி அரேபியா சென்றிருந்தார்.
இந்தப் பயணத்தின்போது, அல்-யமாமா மாளிகையில் சவுதி அரசர் சல்மான் பின் அப்துலாஜிஸை சந்தித்து ஆற்றல், போக்குவரத்து, வங்கி, டிஜிட்டல் தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு உள்ளிட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், சிரியாவில் குர்து பேராளிகள் மீது துருக்கி மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்தும், எண்ணெய் விலை ஏற்றம் குறித்தும் அரசருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையும் வாசிங்க : சிரியாவில் திடீர் திருப்பம், சிரிய உள்நாட்டுப் போர் பின்னணி!
இதனிடையே, சவுதி எண்ணெய் துறை இணை அமைச்சர் இளவரசர் அப்துல்லாஜிஸ் பின் சல்மான் தலைமையில் இருநாடுகளுக்கும் இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் பெரும்பாலானவை ஆற்றல், பெட்ரோகெமிக்கல், போக்குவரத்து, செயற்கை அறிவாற்றல் ஆகியவை குறித்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களாகும்.
தொடர்ந்து, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் நடைபெற்ற சவுதி - ரஷ்யா பொருளாதார கவுன்சிலின் முதல் கூட்டத்தில் அதிபர் புடின் கலந்துகொண்டார்.
ரஷ்யாவுடனான சவுதி அரேபியாவின் உறவு, அமெரிக்க உறவை பாதிக்குமா என்ற கேள்விக்கு சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அப்தெல் அல்-ஜுபெய்ர், "ரஷ்யாவுடனான எங்களது நெருக்கமான உறவு, அமெரிக்காவுடனான எங்களது உறவை எந்த வகையிலும் பாதிக்காது" எனப் பதிலளித்தார். சவுதி பயணத்தை முடித்துக்கொண்டு, விளாடிமிர் புடின் இன்று ஐக்கிய அமீரகம் (UAE) செல்லவுள்ளார்.
இதையும் வாசிங்க : 'காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் நபர் நானில்லை' - சிரிப்பலையை ஏற்படுத்திய அபிஜித் பானர்ஜி!