உலக நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகள் வைரஸை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட முக்கிய நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரை குறித்து சவுதி அரேபியா அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவந்தது,
இதையடுத்து, ஹஜ் யாத்திரை குறித்து பேசிய ஹஜ் அமைச்சர் முகமது பெண்டன், "கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு தொடர்ந்து போராடி வருகிறது. இந்த தொற்று மேலும் தீவரமடைவதை தடுக்க வரலாற்றில் இதுவரை எடுக்கப்படாத முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜூலை 31 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ஹஜ் யாத்திரையின் போது தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு உலகம் முழுவதுமிருந்து சுமார் ஆயிரம் ஹஜ் பயணிகளே அனுமதிக்கப்படுவர். ஆயிரத்திற்கும் குறைவானர்கள் அல்லது ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஹஜ் பயணத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஆனால், பத்தாயிரத்திற்கும் குறைவானவர்களே அனுமதிக்கப்படுவர் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
கடந்த ஆண்டு, ஹஜ் பயணத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். தற்போது 65 வயதிற்கு உள்பட்டோர், எவ்வித நோய்த் தொற்றாலும் பாதிக்கப்படாத ஆரோக்கியமான நபர்கள் மட்டுமே ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு இங்கு மீண்டும் கரோனா பரிசோதனைகள் செய்யப்படும். மேலும், அவர்கள் பயணத்திற்கு பிறகு தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த வேண்டியிருக்கும்" எனவும் தெரிவித்தார்.