ரியாத்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, சவூதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை கோரியது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்க சவூதி அரேபியா மறுத்துவிட்டது. மேலும் “இது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம், இதில் சவூதி அரேபியா தலையிடாது” என்றும் கூறியது.
இந்நிலையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தின் முதலாம் ஆண்டை பாகிஸ்தான் கடைபிடித்தது. அப்போது தொலைக்காட்சியில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி, “ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சவூதி அரேபியா செயலாற்ற வேண்டும்” என அறைக்கூவல் விடுத்தார்.
இது சவூதி அரேபியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜாவத் பஜ்வா மற்றும் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ) தலைவர் ஃபயத் பின் ஹமீத் அல் ருவாய்லி ஆகியோர் சவூதி அரேபியா சென்றனர்.
அங்கு அவர்கள் சவூதி பாதுகாப்புத் துறை அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானை சந்தித்து பேசினார்கள். இதையடுத்து பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் பாகிஸ்தான் ராணுவ தலைவர்களை, பட்டத்து இளவரசர் சந்திக்க மறுத்துவிட்டதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் அமைச்சரின் கருத்தால் கோபம் அடைந்திருக்கும் சவுதி, பாகிஸ்தானுக்கு கடனாக கொடுத்த தொகையை திருப்பி வழங்குமாறும் நிர்பந்திப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1980ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் வாங்கிய எஃப் -16 ரக போர் விமானங்களுக்கு பணம் செலுத்த உதவியது மற்றும் ஆறு பில்லியன் அமெரிக்க டாலர் கடன்களை அளித்தது என இஸ்லாமாபாத்துக்கு ரியாத் பலமுறை உதவியுள்ளது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு கடனும் இல்லை; எண்ணெய்யும் இல்லை: கடுங்கோபத்தில் சவூதி அரேபியா