2030இல் நடைபெறவுள்ள 21ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியை எங்கு நடத்தலாம் என்பது குறித்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் கலந்தாலோசித்தது. அப்போது, தோகாவில் நடத்த கத்தாரும், தங்கள் நாட்டின் தலைநகர் ரியாத்தில் நடத்த சவூதி அரேபியாவும் விருப்பம் தெரிவித்தன.
இருநாடுகளிடையே போட்டி ஏற்பட்டதால், வாக்கெடுப்பு நடத்திட முடிவுசெய்தனர். ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 45 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆன்லைன் மற்றும் வாக்குச்சீட்டு மூலம் தங்களது வாக்கை பதிவுசெய்தனர். ஆனால், மின்னணு எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஆன்லைன் வாக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டது.
வாக்கெடுப்பில் வென்ற கத்தார்
இறுதியாக, அதிக வாக்குகள் பெற்ற கத்தாருக்கு 2030ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமம் வழங்கப்பட்டது. அதே சமயம், 2ஆவது இடத்தைப் பெற்ற சவூதி அரேபியாவுக்கு 2034ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
முடிவை வரவேற்கும் வகையில், கத்தார் அலுவலர்கள் முகக்கவசம் அணிந்தபடி கொடியசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். ஆனால், இரு நாடுகள் வாங்கிய மொத்த வாக்குகளை வெளியிடவில்லை.
2022ஆம் ஆண்டுக்கான போட்டியை சீனாவும், 2026ஆம் ஆண்டுக்கான போட்டியை ஜப்பானும் நடத்தும் உரிமையைப் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.