இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மீது அந்நாட்டில் பெரு முதலாளிகளிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அத்துடன், அவருக்கு ஆதரவாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட பல முன்னணி ஊடகங்களுக்கு அவர் பரிசுகளைக் கொடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டதும் அம்பலமானது.
இதனையடுத்து, இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நெதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முறையாக ஆணையம் அமைத்து விசாரணை நடத்தக்கோரி இஸ்ரேலியர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்றுவரும் இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான போராட்டம் தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலைத் தடுக்க தவறிய அரசு நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருந்த மக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பென்ஜமின் நெதன்யாகு பிரதமர் பதவியை அலங்கரிக்க தகுதியற்றவர் என்று கூறி நேற்று இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, ஜெருசலேமில் உள்ள பிரதமர் நெதன்யாகுவின் அதிகாரப்பூர்வமான இல்லத்தையும், அலுவலகத்தையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.