வடகொரியா: முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாட்டு மக்கள் 10 நாள்களுக்குச் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, பிறந்தநாள் போன்ற எந்த விழாக்களும் கொண்டாடக் கூடாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நாட்டில் சட்டங்கள் மிகவும் கடுமையாக இருக்கும் எனக் கேள்விப்பட்டதுண்டு. அதேபோல் அந்நாட்டில் தகவல்கள் அனைத்தும் வெளி உலகிற்குத் தெரியாமல் பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால் அங்குள்ளவர்கள் சிரிக்கவே கூடாது என்று வெளியாகும் தகவல்கள் அந்த நாட்டை பற்றிய கேள்விகளை அதிகரித்துள்ளது.
துக்கம் அனுசரிக்கப்பட வேண்டியதுதான் அதில் மாற்றுக்கருத்தேதும் இல்லை. துக்க வீட்டில்கூட அவர்களின் துயரத்தை கலைக்க சிலர் நகைச்சுவையுடன் கலந்துரையாட கேட்டிருப்போம்.
தொடர்ந்து அழுதுகொண்டிருந்தால் மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ உலகமே கூறுகிறது. அதனால்தான் துக்க வீடுகளில் தொடர்ந்து அழுபவர்களை ஆசுவாசப்படுத்துவதற்காக இறந்தவரின் பழைய நகைச்சுவை விஷயங்களை நினைவுப்படுத்துவதை அறிந்திருப்போம்.
ஆனால் பத்தாண்டு நினைவு நாளுக்கெல்லாம் வடகொரிய அரசின் இந்த அறிவிப்பு கொஞ்சம் ஓவர்தான்.
தமிழ்நாட்டில்கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தத்திற்காக ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்தார். அந்த பரபரப்பான சூழலில் சசிகலா செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், திமுகவுடன் ஓ. பன்னீர்செல்வம் உறவில் இருப்பதாகவும், ஸ்டாலினும் ஓபிஎஸ்ஸும் பேரவையில் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர் எனவும் குற்றஞ்சாட்டியது நினைவிருக்கலாம்.
அப்போது ஓபிஎஸ் ஒரு பதில் அளித்தார். அது:
- இது இயல்பாக நடந்த சம்பவம், மிருகங்களால் சிரிக்க முடியாது. மனிதர்களால் மட்டுமே சிரிக்க முடியும். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதிலும், சிரித்துக் கொள்வதிலும் எந்தத் தவறுமில்லை.
ஆக சிரிப்பு என்பது மனிதர்களுக்குள் ஊற்றெடுக்கும் அற்புத மருத்துவ குணம். தாராளமாய் சிரியுங்கள் நோய்விட்டுப்போகும்; மனத்தை லயிக்கச் செய்யும்!
இதையும் படிங்க: 'பூமியில இருக்குறது கொஞ்ச காலம்... சிரிச்சு சந்தோஷமா இருப்போமே!'