ஜெருசலேம் (இஸ்ரேல்): இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்ட என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் ஓட்டுக்கேட்பு செயலி மூலம் உலகெங்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காணிக்கப்படுவதாக ஃபார்பிடன் ஸ்டோரிஸ் என்னும் அமைப்பு குற்றஞ்சாட்டியது. இந்தப் பட்டியலில் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அரசியல் ரீதியாகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெகாசஸ் செயலியைத் தயாரித்த என்எஸ்ஓ குழுமம், இந்தக் குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
என்எஸ்ஓ குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
- நன்கு திட்டமிடப்பட்டு ஊடகத்தினரால் ஊதிப்பெரிதாக்கப்பட்ட இந்தச் செய்தி ஃபார்பிடன் ஸ்டோரிஸ் அமைப்பினால் அவதூறாகப் பரப்பப்பட்டுள்ளது.
- இனிமேல் ஊடகத்தினரின் இதுபோன்ற கேள்விகளுக்கும், அவதூறு பரப்புரைகளுக்கும் செவிசாய்க்க மாட்டோம் என்பதை என்எஸ்ஓ குழுமம் தெரிவித்துக்கொள்கிறது.
- நாங்கள் மறுபடியும் சொல்கிறோம். வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இருப்பவர்கள் பெகாசஸ் செயலியின் இலக்கோ (TARGET) அல்லது திட்டமிடப்பட்ட இலக்கோ (POTENTIAL TARGET) அல்ல.
- அந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கும், குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கும் என்எஸ்ஓ குழுமத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
- அப்பட்டியலில் உள்ள எந்தவொரு பெயரும் பெகாசஸ் செயலியின் இலக்கு அல்லது திட்டமிடப்பட்ட இலக்குடன் தொடர்புடையது என்பது முற்றிலும் தவறானது.
- என்எஸ்ஓ ஒரு தொழில்நுட்ப நிறுவனம். வாடிக்கையாளர்களின் தரவுகளை அணுகவோ, அல்லது அந்த பெகாசஸின் அமைப்பை (system) இயக்கவோ எங்களால் முடியாது. ஆனால் விசாரணையின்போது இதுபோன்ற தகவல்களை எங்களுக்கு வழங்க அவர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
- எங்கள் தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து நம்பத்தகுந்த ஆதாரங்களை முன்வைக்கும்பட்சத்தில் என்எஸ்ஓ அதை தீவிரமாக ஆராயும். மேலும், தேவைப்படும் இடத்தில் இந்த பெகாசஸ் அமைப்பை நிறுத்திக்கொள்வோம் (shut down).
- என்எஸ்ஓ குழுமம் உயிரைக் காப்பாற்றும் பணியைத் தொடர்ந்து செய்யும். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு, பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் வளையங்கள் போன்றவற்றை தடுப்பது, காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டறிதல், இடிந்து விழுந்த கட்டடங்களின் கீழ் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிதல், ட்ரோன்கள் மூலம் ஊடுறுவல் போன்றவற்றை தடுக்க தொடர்ந்து பணியாற்றுவோம் என விளக்கமளித்துள்ளது.