கோவிட் - 19 வைரஸ் தொற்று தற்போது உலக நாடுகளில் மிக வேகமாக பரவிவருகிறது. இத்தாலி, ஈரான், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலிலும் வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டு பிரமதரின் உதவியாளர்களில் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது திங்கள்கிழமை(மார்ச் 30) உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 70 வயதான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவருடன் மற்ற இரு உதவியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக போராட மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தொடரில், இப்போது வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பிரதமரின் உதவியாளரும் பங்கேற்றார்.
இதனால், விரைவில் இஸ்ரேலில் பல தலைவர்கள் தனிமைப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, மார்ச் 15ஆம் தேதி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில் இதுவரை 4,347 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த இஸ்ரேலில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உணவுகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டுமே வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க கோவிட் -19: சீனாவை மிஞ்சிய ஸ்பெயின்