மத்திய கிழக்கு ஆசிய நாடான லெபனானில் விலைவாசியை அதிகரிப்பது, புதிய வரிகள் கொண்டுவருவது தொடர்பான அரசின் திட்டம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் செய்துவருகின்றனர்.
ஆட்சியமைத்து ஓராண்டுகூட ஆகாத பிரதமர் சாத் ஹரிரி தலைமையிலான கூட்டணி அரசை கலைக்கக்கோரி போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தலைநகர் பெய்ரூட்டில் வெள்ளி நள்ளிரவில் தொடங்கிய இந்தப் போராட்டம் காட்டுத்தீ போல் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவி கலவரமாக மாறியுள்ளது.
புதிய வரிகள் கொண்டுவருவது தொடர்பான திட்டத்தை திரும்பப்பெறுவதாக அரசு அறிவித்த போதிலும், போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
72 மணி நேரத்துக்குள் பிரச்னை தீர்க்க வேண்டும்
இதனிடையே, நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய சாத் ஹரிரி, "இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண கூட்டணி கட்சிகளுக்கு மிகக்குறைந்த காலக்கெடுவான 72 மணி நேரம் தருகிறேன். அதற்குள் அரசையும் போராட்டக்கார்களையும் சர்வதேச நட்பு நாடுகளையும் சமாதானப்படுத்த வேண்டும்" என்றார். நாட்டின் பொருளாதாரம் மிக இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதாகவும் இவர் உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் வாசிங்க : 'பாகிஸ்தான் குருத்வாராவை இந்தியர்கள் பார்க்க இனி பைனாகுலர் தேவைப்படாது' - பிரதமர் மோடி