மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள துறைமுகக் கிடங்கில் சுமார் ஆறு ஆண்டுகளாக 2,750 கிலோ அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட்டானது திடீரென்று பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தினால் ஏற்பட்ட அதிர்வலைகளால் சுமார் ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தின் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்தன.
மேலும், இந்தத் துறைமுகக் கிடங்கிற்கு அருகே இருந்த அனைத்துக் கட்டடங்களும் முழுவதுமாக நாசமாகின. இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஆராயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இந்த வெடி வித்து காரணமாக சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இவ்வளவு ஆபத்தான அமோனியம் நைட்ரேட்டை ஆறு ஆண்டுகளாக துறைமுகத்தில் பொறுப்பற்ற முறையில் வைத்திருந்த லெபனான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மக்களின் போராட்டம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து லெபனான் அமைச்சரவையிலிருந்து நீதித்துறை அமைச்சர் மரியா கிளாடி நஜிம், பொருளாதாரத் துறை அமைச்சர் காசி வஸ்னி, தகவல் துறை அமைச்சர் மானல் அப்தெல், சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாகத் துறை அமைச்சர் டாமினஸ் ஆகியோர் பதவி விலகினர். அமைச்சர்களுடன் சேர்த்து எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்தச் சூழலில், பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு பொறுப்பற்று லெபனான் பிரதமர் ஹசர் டயப் உள்பட அந்நாட்டின் மொத்த அமைச்சரவையும் தற்போது ராஜினாமா செய்துள்ளது.
இது குறித்து பிரதமர் ஹசன் டயப், "நான் இப்போது பிரதமர் பதிவியில் இருந்து விலகுகிறேன். அப்போதுதான் மாற்றத்திற்கான மக்களின் போரில் அவர்களுடன் இணைந்து போராட முடியும். எனவே, நான் எனது பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். இனி கடவுள் லெபனானை காப்பாற்றட்டும்” என்றார்.
லெபனான் ஏற்கெனவே கரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல காரணங்களால் பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்தச் சூழலில் இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் கடுமையாக பாதித்துள்ளது.
மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து லெபனான் பிரதமர் உள்பட அந்நாட்டின் மொத்த அமைச்சரவையும் பதவி விலகியிருந்தாலும், தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் தேவையான துணிச்சலான முடிவுகளை எடுக்க லெபனான் அரசு தவறியுள்ளதாகவும் ஒருசாரார் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பெய்ரூட் வெடிப்புக்கு பிறகு அமோனியம் நைட்ரேட் குறித்த பார்வைகள்!