இத்தாலி தலைநகர் ரோமில் பள்ளி மாணவர்கள் 51 பேரை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்து வழக்கமான பாதையில் செல்லாமல் வேறு வழியில் சென்றது. இதனை உணர்ந்த பள்ளி ஆசிரியர், மாணவர்கள் ஓட்டுநரிடம் கூச்சலிட்டு முறையிட்டனர்.
அப்போது, ஓட்டுநர் மிகுந்த கோபத்தில் இருந்ததாகவும், "யாரும் உயிர்பிழைக்க முடியாது" என்றும் மாணவர்களை நோக்கி கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தான் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மாணவர்களை ஓட்டுநர் மிரட்டியுள்ளார். இந்தச்சூழலை புரிந்துகொண்ட மாணவர் ஒருவர் பெற்றோரை அலைபேசியில் தொடர்புகொண்டார்.
அந்த மாணவனின் பெற்றோர் மூலம் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர், பள்ளி பேருந்தை துரத்தி சென்றதோடு பக்கவாட்டில் வாகனத்தை இயக்கி ஓட்டுநருக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இதனையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, காவல் துறையினர் வாகனம் மீது மோதியதில் தீப்பிடிக்கத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, மூச்சுத் திணறலால் சிக்கித்தவித்த மாணவர்களை பேருந்தின் கண்ணாடியை உடைத்து காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
இத்தாலி அரசின் குடியேற்ற கொள்கையை விரும்பாத காரணத்தினாலேயே ஓட்டுநர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. எனினும், பயங்கரவாத தாக்குதலாக இருக்குமோ என்ற கோணத்தில் கைது செய்யப்பட்ட ஓட்டுநரினரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.