இஸ்ரேல் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது.
ஆனால், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பிரதமர் நெதன்யாகு நிரூபிக்க முடியாமல் போனதால் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இஸ்ரேலில் நேற்று முன்தினம் (செப்.17) பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில், பிரதமர் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி 32 இடங்களையும், எதிர்க்கட்சியான புளூ அண்டு ஒயிட் 33 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. அதேபோன்று, அரபு இஸ்ரேல் கட்சிகளின் கூட்டமைப்பான ஜாயின்ட் ஸிஸ்ட் 12 இடங்களையும், மத பழமைவாதக் கட்சியான ஷாஸுக்கு 9 இடங்களையும் கைப்பற்றி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
வலதுசாரி அரசை அமைக்க முயற்சிக்கும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இது பின்னடைவாக அமைந்துள்ளது.
தற்போது தீவிர கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் பிரதமர் நெதன்யாகு, ஐநா பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 120 இருக்கைகள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், 61 இடங்கள் பெரும்பான்மை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.