இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கிடையே, பொது இடங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை ராணுவத்தினர் கைப்பற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ராணுவம் முழுமையாக ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கையின் தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளுக்கு அவசரகால சட்டத்தின் கீழ் அந்நாட்டு அதிபர் மைத்திரிபாலா சிறிசேன தடை விதித்தார். மேலும், இந்தத் தாக்குதலின் எதிரொலியாக பர்தா அணியத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மனித வெடிகுண்டுகளாக செயல்பட்ட பயங்கரவாதிகளை ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல்-பக்தாதி வாழ்த்தி பேசும் வீடியோ பதிவு ஒன்றை இந்த அமைப்பின் அல் ஃபா்குன் ஊடகம் வெளியிட்டுள்ளது.
அதில், "சிரியாவின் பாக்ஹுஸ் பகுதியில் நடைபெற்றுவந்த தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது. இங்கு நடைபெற்ற தொடர் தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இலங்கையில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பின்பும், அதிகளவிலான தாக்குதல் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார். இந்தச் செய்தியை கத்தார் தலைநகர் தோஹாவில் செயல்பட்டுவரும் சர்வதேச செய்தி தொலைக்காட்சியான அல்- ஜசிரா உறுதிபடுத்தியுள்ளது.
சிரியாவின் கட்டுப்பாட்டில் கடைசியாக உள்ள பாக்ஹுஸ் பகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தில், கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்க ஆதரவுப் படையினர் தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இத்தகைய சூழலில், கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் கழித்து அல்-பாக்தாதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.