உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் இன்று காலை 180 பயணிகளுடன் ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானிலிருந்து உக்ரைனுக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்துக்குள்ளிருந்த பயணிகள் 180 பேர் இருந்தனர்.
விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் விழுந்து நொறுங்கியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் முக்கிய ராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லாத விமான தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரின் இறுதி ஊர்வலம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. காசிம் சுலைமானியின் உடலுக்கு நாடே ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தியது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 56 பேர் பலியாகினர். அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை ஈரான் மக்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அமெரிக்க விமானங்கள் வளைகுடா நாடுகள், குறிப்பாக ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளில் பறக்க வேண்டாம் என அமெரிக்க விமான ஆணைய நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையில், பயணிகள் விமானத்தின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கூறியிருந்தது.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஈரான் தலைநகரில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.