சவுதி அரசின் அராம்கோ எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு முக்கிய எண்ணெய் ஆலைகள் மீது கடந்த சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து, சவுதி அரசு அதனுடையே கச்சா எண்ணெய் உற்பத்தியில் 50 சதவீதத்தை (அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 50 லட்சம் பீப்பாய்) குறைத்ததுள்ளது. இதன் எதிரொலியாக உலகளவில் எண்ணெய் விலை பன்மடங்கு உயர்ச்சி கண்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா ஈரான் மீது பழி சுமத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகம் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சவுதி அரசு நடத்திய முதற்கட்ட விசாரணையில் அராம்கோ எண்ணெய் ஆலைகள் தாக்குதலில் ஈரான் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
உலகின் ஆற்றல் திறனைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த நாசகாரச் செயல், உலக அமைதியையும், பாதுகாப்பையும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். தாக்குதல் தொடர்பாகக் களத்தில் விசாரணை செய்ய ஐநா, சர்வதேச வல்லுநர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
இதுபோன்ற தாக்குதலை எதிர்கொள்ளவும், நாட்டு மக்களை பாகாக்கவும் சவுதி அரசு உறுதியாகவுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சவுதி தாக்குதல் தொடர்பாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறிகையில், " தினம்தோறும் ஏமனில் குண்டுமழை பொழியப்பட்டு ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள்.
ஏமன் நாட்டுக்கு எதிராக சவுதி அரசு மேற்கொண்டுவரும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் கட்டாயத்தில் ஏமன் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்" என்றார்.
ஏமனில் கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில், சவுதி கூட்டுப்படையினர் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.