சர்வதேச அரங்கில் அமெரிக்கா - ஈரான் இடையே மிக மோசமான உறவு இருந்து வருகிறது. ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள அமெரிக்கா, சமீபத்தில் ஈரானின் முக்கிய தலைவர்கள் மீதும் தடை உத்தரவை அமல்படுத்தியது. இதுமட்டுமல்லாமல் ஈரான் உடன் எண்ணெய் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்தியது.
இந்நிலையில், ஈரானில் இருந்து பெட்ரோலியப் பொருட்களுடன் எண்ணெய் கப்பல் ஒன்று சிரியா நோக்கி சென்றுள்ளது. இந்த கப்பல் கடந்த வியாழக்கிழமை ஸ்பெயின் அருகே பிரிட்டீஸ் அரசின் வெளிநாட்டு மண்டலமன கிப்ரால்டர் கடற்பகுதியில் சென்றபோது, அக்கப்பலை பிரிட்டீஸ் மரைன் அலுவலர்கள் (கடற்பாதுகாப்பு அலுவலர்கள்) சிறை பிடித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் சிரியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை மீறி, ஈரானிலிருந்து சிரியாவிற்கு எண்ணெய் கடத்துவதாக சந்தேகித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கப்பலை பிணையில் வைக்குமாறு கிப்ரால்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஈரான் அரசு டெஹ்ரானில் உள்ள பிரிட்டன் தூதருக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அதில், பிரிட்டன் இதுபோன்று கப்பலை பிடித்திருப்பது திருட்டுச் சம்பவத்தை போன்றது. மேலும் அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு பிரிட்டன் செயல்படுவது கண்டனத்துக்குறியது. பிணையில் உள்ள எங்களுக்கு சொந்தமான கப்பலை விடுவிக்கவில்லை என்றால் பிரிட்டனுக்கு சொந்தமான எண்ணெய் கப்பலை கைப்பற்றி சிறைபிடிப்போம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள பிரிட்டன், நாங்கள் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி சிரியாவிற்கு எண்ணெய் கடத்தப்படுகிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே கப்பலை சிறைபிடித்தோம் என்று கூறியுள்ளது.