உலகெங்கும் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. மத்திய கிழக்குப் பகுதிகளில் இருக்கும் நாடுகளில் கோவிட்-19 தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஈரான் உள்ளது.
அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,028 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாடு முழுவதும் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,56,792ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், ஈரானில் நேற்று (ஆக. 22) ஒரே நாளில் 126 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 20,502ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கோவிட்-19 பரவல் காரணமாக ஈரானில் 164 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரானில் இதுவரை சுமார் 12 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 164 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூலை 22ஆம் தேதி அதிகபட்சமாக 26 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தற்போது ஈரான் 11ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குழந்தைகள் மூலம் அதிகம் பரவும் கரோனா - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்