சீனா உள்ளிட்ட நாடுகளில் கொவிட்-19 (கொரோனா வைரஸ்) என்ற தொற்று நோய் வேமகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் காரணமாக ஈரானில் பலி எணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்திருந்தது.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அமகது அமிராபாதி, கொரோனா வைரஸால் கோம் மாகாணத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பாதிப்பின் தீவிரத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மறைக்கப் பார்ப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனைத் திட்டவட்டமாக மறுத்துப் பேசிய ஈரான் சுகாதாரத் துறை அமைச்சர் சயீது நமாகி, 12 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளளதாகவும், 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சமீபத்தில், அமெரிக்கா-ஈரான் இடையே எழுந்த மோதலின் போது ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து உக்ரைனுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றை அந்நாட்டு பாதுகாப்புப் படை தவறுதலாகச் சுட்டு வீழ்த்தியது. இதனை ஒப்புக்கொள்ளவதற்கு முன்பு, அந்த விமான விபத்துக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஈரான் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பின் தீவிரத்தை மறைக்கப்பார்ப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பது அந்நாட்டின் வெளிப்படை தன்னையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா பீதி: இத்தாலியில் உலகப் புகழ்பெற்ற திருவிழா ரத்து!