ஈரான் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துவருவதால் மத்திய கிழக்கு ஆசிய, வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே, மத்திய கிழக்கு ஆசிய பகுதிக்கு வானூர்தி ஏந்தி கப்பல்கள், பி-52 போர் விமானங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளை அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளது. இந்த பதற்றத்தைத் தணிப்பது குறித்து, வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முகமது பின் அம்புதுல்லா அல் தானி, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெவத் ஜாரிஃபை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னணி:
2015ஆம் ஆண்டு ஈரான், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே ஜாயன்ட் காம்பிரிஹென்சிவ் பிளான் ஆக்ஷன் (Joint Comprehensive Plan Action) என்றழைக்கப்படும் ஈரான் அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக ஈரான் மேற்கொண்டு வந்த அணுசக்தி பயிற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும், அந்நாட்டின் மீது உலகநாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கும் நோக்கிலும் இந்த ஒப்பந்தமானது போடப்பட்டது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக ஈரான் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டிய அதிபர் ட்ரம்ப், 2018 மே மாதம் அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டார்.
இதுதவிர, ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், 2018 நவம்பர் மாதம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆறுமாதகாலம் தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மாதம் 2ஆம் தேதி அதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், ஈரானிடமிருந்து வெளிநாடுகள் எண்ணெய் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈரானின் பிரதான ஆதாரமாக விளங்கும் எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்யத்துக்குக் கொண்டுவந்து அந்நாட்டு அரசு கடும் நெருக்கடியைக் கொடுப்பதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது.
அமெரிக்காவின் இந்த போக்குக்கு பதிலடிகொடுக்கும் விதமாக, அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக ஈரான் அதிபர் ஹசான் ரவ்ஹானி கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து, கிழக்கு ஆசிய பகுதியில் அமெரிக்கா தன்னுடைய பாதுகாப்பு படைகளை நிலைநிறுத்தியுள்ளது. இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.
முன்னதாக, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாதெவ் ஜாரெஃப், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். அப்போது, ஈரானிடம் எண்ணெய் வாங்குவது குறித்து மக்களவைத் தேர்தலை முடிந்த பின்னர் முடிவெடுக்கப்படும் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.