அமெரிக்காவில் நாளை நடைபெறவிருக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஷாரிஃப் அமெரிக்காவிடம் நுழைவு இசைவு கோரியிருந்தார்.
இதனிடையே, அமெரிக்கத் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதல் அதிகரித்துள்ளதால் ஜாவத் ஷாரிஃபுக்கு நுழைவு இசைவு வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சரின் நுழைவு இசைவு விண்ணப்பத்தைச் சரிபார்க்க போதிய நேரமில்லாததால் அதனைத் தாங்கள் நிராகரித்துவிட்டதாக அமெரிக்க அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜாவத் ஷாரிஃப் கூறுகையில், "நேரமின்மையின் காரணமாக எனக்கு நுழைவு இசைவு வழங்க முடியவில்லை என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸிடம் அவர் (அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ) கூறியிருக்கிறார். ஆனால், நுழைவு இசைவு வழங்கக்ககோரி பல வாரங்களுக்கு முன்பே நான் விண்ணப்பித்துவிட்டேன்.
தளபதி சுலைமானி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்தே நான் நுழைவு இசைவு வேண்டுமென அமெரிக்காவிடம் கோரிக்கைவிடுத்ததாக அந்நாடு தவறான பிம்பத்தை உருவாக்க நினைக்கிறது" என விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க : அமெரிக்க விமான தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! - உச்சகட்ட பதற்றம்