இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. பல வகையான உருமாறிய கோவிட்-19 வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகள் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்குத் தடைவிதித்துள்ளன. இந்நிலையில், ஈரான் நாடும் இந்திய விமானங்களுக்குத் தடைவிதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து பேசிய ஈரானின் சிவில் அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஹசன் சிபாக், " ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் வழக்கமான விமான சேவைகள் எதுவும் இல்லை.
அவ்வப்போது மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன. கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளதால், தங்கள் நாட்டு மக்களின் நலனுக்காக இந்திய விமானங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 41 நாடுகள் ஈரானின் தடை பட்டியலில் உள்ளது. அதேபோல் பாகிஸ்தானிலும் கரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் அந்நாட்டின் விமானங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 230 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 23 லட்சத்து 77 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுடன் துணை நிற்போம் - பாகிஸ்தான்