இந்தியப் பிரதமராக மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான்-இந்தியா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற கூடுதல் வாய்ப்புள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் கூறியிருந்தார். இந்தப் பேச்சைக் கடுமையாக விமர்சித்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பாகிஸ்தானுடன் பாஜக கூட்டுச் சேர்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டின.
இந்நிலையில், பாகிஸ்தான் செனட் நிலைக் குழுவிடம் உரையாற்றிய அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது குரேஷி, பிரதமர் இம்ரான்கானின் பேச்சானது தவறான கண்ணோட்டத்தில் புரிந்துக் கொள்ளப்பட்டு செய்திகளாக வெளிவந்துள்ளதாகவும், இந்திய ஊடகங்கள் அனைத்தையும் சர்ச்சைக்குரிய பொருளாக மாற்றுவதாகவும் கடுமையாக சாடினார்.
மேலும், இம்ரான்கானின் பேச்சு அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றியாளரை அந்நாட்டு மக்கள்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் விளக்கமளித்துள்ளார்.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், பிப்ரவரி 14ஆம் தேதி, இந்தியத் துணை ராணுவப் படையான சி.ஆர்.பி.எஃப். மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ( ஜெய்ஷ்-இ-முகமது) மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இருநாட்டிற்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவிவரும் வேலையில் முகமது குரேஷி இவ்வாறு பேசியுள்ளார்.
முன்னதாக, புல்வாமா தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான பாலகோட்டில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதலைத் போன்று, ஏப்ரல் 16-20 ஆகிய தேதிகளுக்குள் பாகிஸ்தான் மீது அந்நாடு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக முகமது குரேஷி குற்றம்சாட்டியிருந்தார்.
இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள இந்தியா, முகமது குரேஷியின் குற்றச்சாட்டு அபத்தமானது என்றும், இருநாட்டிற்கும் இடையே போரை மூட்டிவிடுவதே இதன் நோக்கமென்றும் விமர்சித்துள்ளது.