சவுதி அரேபியா அரசுக்குச் சொந்தமான இரண்டு முக்கிய கச்சா எண்ணெய் ஆலைகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த எண்ணெய் ஆலைகளில் தீ கொளுந்துவிட்டு எரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தாக்குதலால் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக சவுதி அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தாங்கள் விசாரணை செய்துவருவதாகவும் பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஏமன் அரசுக்கு ஆதரவு தரும் சவுதி கூட்டுப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசி மூலம் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானைத் தொடர்பு கொண்டு தாக்குதல் குறித்து கேட்டறிந்தார். அப்போது, "சவுதி அரசின் முக்கிய ஆற்றல் கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம்" என ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், சவுதியின் பாதுகாப்புக்குத் தேவையான உதவிகளை அமெரிக்க செய்யத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தத் தாக்குதலை ஹவுதிகள் மேற்கொண்டதற்கான எந்தத் தடயமும் இல்லையென்றும் அதனை ஈரான்தான் அரங்கேற்றியிருக்க வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ குற்றம்சாட்டியுள்ளார்.