குஜராத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவான ஹிகா புயல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மேற்கு நோக்கிச் சென்று மத்திய கிழக்கு நாடான ஓமன் கடற்பகுதியை அடைந்தது. ஹிகா புயல் ஓமனின் அல் ஷார்குய்யா மற்றும் அல் உஸ்டா கடற்கரை பகுதியில் நிலைகொண்டிருந்தது.
இதனால் அங்கு மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த புயல் காரணமாக அங்கு தொடர்ச்சியாக கன மழை பெய்தது.
இந்த புயலின் காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது வலுவிழந்து இன்று கரையை கடக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மேற்கு தென்மேற்கு பகுதிகளில் நகர்ந்து வரும் ஹிகா புயலின் வேகம் குறைந்துவருவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனினும் அங்கு பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் ஓமன் கடற்கரையில் சுமார் 20 அடி உயரத்திற்கு அலைகள் ஏற்பட்டன. இந்த புயலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.