அரபு நாடுகளில் அதிகம் மக்கள் தொகை கொண்ட எகிப்து நாட்டில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (அக்.24) தொடங்கியது. மொத்தமுள்ள 568 தொகுதிகளில், 50 விழுக்காடு இடங்களில் முதற் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அரசுக்கு நெருக்கமானவர்களுக்கும் பணக்கார வேட்பாளர்களுக்கும் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
கிசா, மத்திய தரைக்கடல் துறைமுக நகரம், அலெக்ஸாண்ட்ரியா உள்ளிட்ட 14 மாகாணங்களில், அக்டோபர் 24, 25 ஆகிய தேதிகளில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள 13 மாகாணங்களில், நவம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இரண்டாம் கட்ட கரோனா வைரஸ் பரவல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், எகிப்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற செனட் தேர்தல் போல, வாக்காளர்கள் அனைவருக்கும் முகக்கவசம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாக்காளர் ஒருவர் கூறுகையில், “அரசு என்ன நினைத்ததோ அவை அனைத்தையும் நிறைவேற்ற நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. அரசின் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்” என்றார். தேர்தல் முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.