பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள சிரியாவிற்கு எண்ணெய் ஏற்றிச் சென்ற, 'கிரேஸ் 1' என்ற ஈரான் எண்ணெய்க் கப்பலை ஜிப்ரால்டர் (பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிராந்தியம்) அருகே பிரிட்டன் கடற்படையினர் கடந்த ஜூலை 4ஆம் தேதி சிறைபிடித்தனர்.
இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற 'ஸ்டீனா இம்பெரோ' என்ற பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறைபிடித்தது. ஈரான் கடல் எல்லைக்குள் 'ஸ்டீனா இம்பெரோ' (Stena Impero) சட்டவிரோதமாக நுழைந்ததால் மட்டுமே, அதனை தாங்கள் சிறைப்பிடித்ததாக ஈரான் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க : சிரியா துறைமுகத்தில் ஈரான் கப்பல் ?
இந்நிலையில், சமீபத்தில் விடுவிக்கப்பட்ட இந்தக் கப்பல் நேற்று துபாய் துறைமுகத்தை சென்றடைந்ததாக அக்கப்பலின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலை இயக்கும் ஸ்டீனா பல்க் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எரிக் ஹனெல் கூறுகையில், "கப்பலில் சென்ற அனைத்து ஊழியர்களும் நலமாகவும், உற்சாகத்துடனும் உள்ளனர். சுமார் 10 வாரங்கள் ஈரானால் சிறைப்பிடிக்கப்பட்ட அவர்கள் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம்" எனக் கூறினார்.
ஸ்டீனா இம்பெரோ கப்பலில் உள்ள 23 ஊழியர்களில், 18 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.