ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், அதிபர் அஸ்ரப் கானி அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது.
இதனிடையே, அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வந்த தாலிபான், அமெரிக்கா ஒருங்கிணைக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மட்டும் கலந்துகொண்டு வந்தது.
இந்நிலையில், தாலிபானுடன் ஆப்கானிஸ்தான் அரசு நேரடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அந்நாட்டு அமைதிக்கான அமைச்சர் அப்துல் சலாம் ரஹிமி அறிவித்துள்ளார்.
ஏதேனும் ஒரு ஐரோப்பிய நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்த அமைச்சர், இதற்கு 15 அரசுப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக பல்வேறு தர்பினருடன் அரசு ஆலோசனை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
"தோஹா அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பிரதிநிதிகளும் இந்தக் குழுவில் இடம் பெறுவர்" என ரஹினி தெரிவித்தார்.
முன்னதாக, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்ஸாய் அமைத்த உயர்மட்ட அமைதிக் குழுவை, அதிபர் கானி கலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.