ஈரான் நாட்டில் கடந்த பத்து நாட்களாகவே பதற்றமான சூழல் நிலவிவருகிறது. அந்நாட்டின் குவாட் சிறப்புப்படை ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து, அந்நாடு தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
அந்த நடவடிக்கையின்போது, ஈரான் நாட்டிலிருந்து உக்ரைன் செல்லும் பயணிகள் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்துப்பட்டது. அதில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தது சர்வதேச அரங்கில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியது. இது தன்னாட்டு அலுவலர்களின் தவறால் நிகழ்ந்த அசம்பாவிதம் என தெரிவித்த ஈரான் அரசு உரிய விசாரணை நடத்தப்படும் என்றது.
இந்நிலையில், தனது நாட்டின் தவறான செயல்பாடால் இந்த கோர நிகழ்வை கண்டித்து, அந்நாட்டு மக்கள் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் திரண்டு பெரும் போராட்டம் நடத்தினர். அரசுக்கு எதிரான இப்போராட்டத்தை அந்நாட்டு காவல் துறை கடுமையாக ஒடுக்கவே, காவல் துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கான பேர் படுகாயமடைந்தனர். பொதுச் சொத்துகளும் வெகுவாக சேதமடைந்தன.
போராட்டக்காரர்களை ஈரான் அரசு தாக்கியதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்நாடு தனது குடிமக்களை கொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக்கை தவிர்க்க சொல்லும் ஆமை!