பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது பூர்வ பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்க வலியுறுத்தி காஸா-இஸ்ரேல் எல்லைக்கோடு அருகே 2018ஆம் ஆண்டிலிருந்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தப் போராடங்களின்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே எழும் மோதலில் இதுவரை 270 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற நான்கு பாலஸ்தீனியர்கள் காஸா-இஸ்ரேல் எல்லை அருகே சுட்டுவீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
சுட்டுவீழ்த்தப்பட்ட அந்த நால்வரும் ஏகே- 47, கையெறி குண்டு, குண்டு வீசும் ராக்கெட் லான்சர் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் ஏந்தியிருந்ததாவும் அவர்களின் உடல்கள், உடமைகள் தற்போது தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.
இந்தச் சம்பவம் காஸா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. இதனை, 'இது இஸ்ரேலின் புதிய குற்றம்' என்று அந்த அமைப்பினர் இஸ்ரேலை சாடியுள்ளனர்.